டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏர் இந்தியா நிறுவனம் கடனில் தத்தளித்து வந்தநிலையில் அதன் பங்குகளை விற்பனை செய்ய கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு முயன்றது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஷ் பிரைவேட் லிமிடெட் ரூ.18 ஆயிரம் கோடிக்கு விலைக்கு கேட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம், 8-ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் விற்கப்பட்டதாக ஒன்றிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளையும் முறைப்படி, டாடா குழுமத்திடம் ஒன்றிய அரசு ஏற்கெனவே பரிமாற்றம் செய்துவிட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் 27- ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய நிர்வாக இயக்குநராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், துருக்கி ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் இல்கர் ஐசி நியமிக்கப்பட்டார். அவர் அந்த பதவியில் இருந்து விலகியதால், தற்போது தமிழ்நாட்டை சேர்ந்த என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் இருப்பது குறிப்பிடத்தக்கது.