சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் புழல் முன்னாள் ஒன்றிய செயலாளரும், பொதுக்குழு உறுப்பினருமான புழல் நாராயணன்- கவிதா நாராயணன் மகன் எம்.என்.அஜய் தென்னவன்- ஆர்.பாரதி திருமணம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இந்த திருமணத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புழல் நாராயணனை பொறுத்த வரையில் அவர் ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார். எல்லாமே தளபதிதான் என்று. எனக்கு எல்லாமே இந்த கழகம்தான். இந்த இயக்கம் தான். இந்த இயக்கத்தின் தொண்டர்கள் நீங்கள் இல்லை என்று சொன்னால், நானும் இல்லை. மேடையில் இருக்கக் கூடிய யாருமே இல்லை.
ஆக உங்களால், உங்களுடைய ஓயாத உழைப்பால், உங்களுடைய பணிகளால் இந்த கழகம் இன்றைக்கு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் மட்டுமே போதாது. தொடர்ந்து, நாம்தான் இந்த சமுதாயத்திலே நாட்டிலே சுயமரியாதை உணர்வோடு, இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் ஒரு திராவிட உணர்வோடு நம்முடைய பணி அமையப்போகிறது, அமைந்து கொண்டிருக்கிறது.
ஆக அப்படிப்பட்ட இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்டு இருக்கிற ஒரு தூய தொண்டராக, வெற்றி வரும் போகும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், நம்முடைய நாராயணன், கழகத்திற்காக மக்களுக்காக, ஏழை எளியவர்களுக்காக அவர் தொடர்ந்து கடமையை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்.
கழகமே மூச்சு என அவர் செயல்படக் கூடியவர். பேரறிஞர் அண்ணா, இந்த இயக்கத்தில் பணியாற்றக் கூடிய தொண்டர்களுக்கு நிர்வாகிகளுக்கு, அவர் சொல்லி இருக்கக் கூடிய தாரக மந்திரம், மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக் கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய், அவர்களோடு திட்டமிடு, அவர்களுக்கு தெரிந்தவற்றில் இருந்து தொடங்கு, அவர்களிடம் இருப்பதைக் கொண்டு கடமையை செய் என்று நமக்கெல்லாம் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதை எதற்காக இந்த நேரத்தில் நான் சொல்கிறேன் என்றால், அண்மையில் நடைபெற்று முடிந்திருக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். இதுவரை நாமே இப்படிப்பட்ட வெற்றியை பார்த்தது இல்லை.
100-க்கு 99 சதவீதம் இந்த உள்ளாட்சி தேர்தலிலே நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறோம். இதில் வெற்றி பெற்று இருக்கக் கூடிய உள்ளாட்சி பிரதிநிதிகள் இதை மனதிலே வைத்துக் கொண்டு தங்களது கடமையை நிறைவேற்றிட வேண்டும்.
நம் மீது மக்களுக்கு எந்த அளவு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இந்த வெற்றிதான் நமக்கு சாட்சியாக அமைந்து இருக்கிறது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம், பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். கடமையை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
எனவே மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.