தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தார். அந்த காலகட்டத்தில், பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்றுள்ளன. நிர்வாகம் சார்ந்த மிக முக்கியமான தகவல்களை `இமயமலை யோகி’ என்று சொல்லப்படும் ஒரு நபருக்கு மின்னஞ்சல் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்துவந்துள்ளார். இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. அதற்குப் பின்னர் சித்ரா கைதும் செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதேபோல, சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சீவ், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இது குறித்து பேசிய நீதிபதி, “அனைத்து கைதிகளும் சட்டத்தின் முன் சமம்தான். சித்ரா ராமகிருஷ்ணா உயர் பதவி வகித்தவர் என்பதற்காக அவரை வி.ஐ.பி கைதியாகப் பார்க்க முடியாது. சிறையில் உள்ள எல்லா கைதிகளும் அனுபவிக்கும் அதே வசதிகளைத்தான் அனுபவிக்க முடியும். வீட்டுச் சாப்பாடு சாப்பிட அனுமதிக்க முடியாது. பகவத்கீதை, ஹனுமான் சாலிசா ஆகியப் புத்தகங்களைப் படிக்க அனுமதி அளிக்கப்படும்” என்றார்.