பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். அவர்கள் வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பள்ளி, கல்லூரிகளுக்குள் மாணவ-மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து வரக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின்னர், இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. கல்வி நிறுவனங்களில் தலையை மூடும் வகையிலான ஆடை அணிவதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை என்று மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மத சுதந்திரத்தின் கீழ், ஹிஜாப் அணிய தடை இல்லை என்றும், பொது ஒழுங்கு மீறலைக் கருத்தில் கொண்டு அதைத் தடை செய்ய முடியுமா? என்றும் அவர்கள் வாதிட்டனர்.
நிறுவன ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நியாயமான கட்டுப்பாடுகளைத் தவிர இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நாளை தீர்ப்பளிக்க உள்ளது. இதனால், கர்நாடகாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்தவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும், கூட்டம் கூடவும் நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மார்ச் 21 வரை ஒரு வாரத்திற்கு இந்த தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடையை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.