ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட யானையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நள்ளிரவில் வனச்சரகர் ஜெபஸ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உள்ளே யானை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உரிய ஆவணங்களும் இல்லாததால் யானையை பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாகனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது யானை தூத்துக்குடியை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமானது எனவும், முறையாக அனுமதி பெறாமல் சிவகங்கையில் நடந்த கோவில் திருவிழாவிற்கு அழைத்துச்சென்று திரும்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து உரிமையாளர் ராமதாஸ் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினால் மட்டுமே யானை விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.