திருமலை: ஆந்திராவில் மீனவர் வலையில் அரிய வகை குளோப் மீன் சிக்கியது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பலகுப்தா அடுத்த வசலத்திப்பா என்ற இடத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, இவர்கள் வலையில் அரிய வகையான, மனிதர்களை கொல்லும் வகையில் விஷ தன்மை உடைய மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் தண்ணீரில் சாதாரணமாக இருக்கும். யாராவது தொட்டாலோ அல்லது அதற்கு ஆபத்து என்றால் உடனே தனது உடலில் காற்றை நிரப்பி கொண்டு பலூன் போன்று மாற்றி கொள்ளும். எனவே இது பலூன் மீன், பப்ரா மீன், குளோப் மீன் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அரிய வகை, விசித்திரமான, விஷத்தன்மை கொண்ட இந்த மீன் தங்கள் வலையில் சிக்கியதை அறிந்த மீனவர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இதனை காண பல கிராமங்களில் இருந்து மக்கள் திரண்டனர்.