ஆமதாபாத் : அமெரிக்காவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற, குஜராத்தைச் சேர்ந்த, 37 குடும்பங்களைச் சேர்ந்த, 112 பேர், துருக்கியில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதம்
குஜராத்தில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த நான்கு பேர், கனடா வழியாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்றபோது, பனியில் சிக்கி உயிரிழந்தனர். சமீபத்தில், இந்த சம்பவம் நடந்தது.
இதையடுத்து, அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்போர் பற்றி, குஜராத் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, வடக்கு குஜராத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்க மோகத்தில், ‘ஏஜன்ட்’டுகள் உதவியுடன் செல்வதாக தகவல்கள் கிடைத்தன.
இந்தாண்டு ஜனவரியில், இரண்டு தம்பதியர் மற்றும் இரண்டு குழந்தைகள் இவ்வாறு சென்றபோது, துருக்கியில் காணாமல் போனது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 18 குஜராத்தியர்கள், இவ்வாறு துருக்கியில் காணாமல் போனது தெரிய வந்தது.
இந்நிலையில், 37 குடும்பத்தைச் சேர்ந்த, 112 பேர் காணாமல் போயுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் காந்தி நகர், மேஷானா, ஆமதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:அமெரிக்க மோகத்தில், எப்படியாவது அங்கு சென்று விட பலர் தயாராக உள்ளனர்.
இது போன்று சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதற்காகவே, சில ஏஜன்ட்டுகள் குஜராத்தில் உள்ளனர்.நடவடிக்கைஇங்கிருந்து துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு போலி பாஸ்போர்ட், ‘விசா’ வாயிலாக, மெக்சிகோவுக்கு அனுப்பப்படுகின்றனர். அங்கிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அனுப்பப்படுகின்றனர்.
மெக்சிகோவில் உள்ள ஏஜன்ட் தகவல் தரும் வரை, இவர்கள் சட்டவிரோதமாக துருக்கியில் தங்க வைக்கப்படுகின்றனர். சில நேரங்களில், துருக்கியில் உள்ள ஆள் கடத்தல் கும்பல், இதுபோன்றவர்களை கடத்தி செல்கின்றன.
இங்குள்ள குடும்பத்தாரிடம் பணம் கேட்டும் மிரட்டுகின்றனர். ஆனால், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களோ என்ற அச்சத்தில், போலீசில் புகார் கொடுப்பதில்லை.தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது .இவ்வாறு, அவர்கள் கூறினர்.