பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கூட்டுறவு வங்கியில் நடந்த பண பரிவர்த்தனை எவ்வளவு?: ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில் கூட்டுறவு வங்கிகளில் நடந்த பண பரிவர்த்தனை விவரங்களை வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக திமுக எம்பி தயாநிதி மாறன்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பியுள்ள கேள்வியில் கூறியிருப்பதாவது:* பண மதிப்பிழப்பின் போது அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டு, மூடப்பட்ட வங்கி கணக்குகளின் விவரங்கள் ஒன்றிய அரசிடம் உள்ளதா? * பழைய ₹500,₹1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்கு பின்  ₹500, ₹1,000 நோட்டுகள் ‘ஜன் தன்’ கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளனா? இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி அல்லது நிதி அயோக்  ஏதேனும் ஆய்வுகள் நடத்தி உள்ளதா?* 2016 மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே துவங்கப்பட்ட புதிய வங்கி கணக்குகள், 2016 மார்ச் முதல் 2021 நவம்பர் மாதங்களுக்கு இடையே துவங்கப்பட்ட புதிய வங்கி கணக்குகள் குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி அல்லது நிதி அயோக் மூலம் ஏதேனும் ஆய்வுகள் அல்லது தடயவியல் தணிக்கை செய்யப்பட்டுள்ளனவா? மேல்குறிப்பிட்ட கால இடைவெளியில் வங்கியில் இருந்து பணத்தை திரும்ப பெற்ற கணக்குகள் எத்தனை?. வங்கியில் நிரந்தரமாக மூடப்பட்ட கணக்குகள் எத்தனை என்ற விவரத்தை தெரியப்படுத்த வேண்டும். * பண மதிப்பிழப்பு செய்த கால இடைவெளியில் பல்வேறு மாநில  கூட்டுறவு வங்கிகளின் மூலம் மாற்றப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? இது குறித்த தரவுகள் நிதி அயோக், ரிசர்வ் வங்கியிடம் உள்ளனவா?. அப்படி இருந்தால் அந்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.