புதுடெல்லி:
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் புதுடெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த ஒரு வருடம் சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாய சங்கங்கள் டிராக்டர்களுடன் வந்து போராட்டம் நடத்தின.
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. மேலும் விளை பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலைக்கு மசோதா கொண்டு வருவது பற்றி ஆராய குழு அமைக்கப்படும், விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் நீக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பஞ்சாப் உள்ளிட்ட மூன்று மாநில விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் அரங்கில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமையிலான விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 21ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பிறகும் அரசு முக்கிய உத்தரவாதங்களை செயல்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 11 முதல் 17 வரை குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாத அளிக்க கோரும் வாரத்தை கடைப்பிடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.