மார்ச் 15 உலக நுகர்வோர் தினம் கடைபிடிப்பு | ஆன்லைன் வணிகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்: நிறுவனங்கள் மீதான நுகர்வோரின் புகார்கள் தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை: ஆன்லைன் வணிகம் தொடர்பான புகார்கள் சமீப காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்ற கோரிக்கை வலுத் துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15-ம் தேதி (இன்று) உலக நுகர்வோர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக நுகர்வோர்தினத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு தலைப்புகளுடன் கலந்துரையாடல், கருத்தரங்குகள், குறும்படங்கள் வெளியீடு, பேச்சு, கட்டுரை, விநாடி வினாபோட்டிகள் நடத்தப்படவுள்ளன. குறிப்பாக, மத்திய அரசு 2019-ல் கொண்டு வந்துள்ள நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

இ.காமர்ஸ் புகார்கள்

இதுதொடர்பாக சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) அமைப்பின் இயக்குநர் எஸ்.சரோஜா கூறியதாவது: நம் நாட்டில் 22 முதல் 25 சதவீத மக்களிடம் மட்டுமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு இருக்கிறது.இ.காமர்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருவதுபோல், நுகர்வோரின் புகார்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், மக்களிடம் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த ஆண்டு உலகநுகர்வோர் தினத்தையொட்டி நம்பகமானடிஜிட்டல் நிதி (ஃபேர் டிஜிட்டல் ஃபைனான்ஸ்) என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. பள்ளி,கல்லூரி மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, செய்முறை பயிற்சிகளையும் அளிக்க வேண் டும்.

சமீபகாலமாக, குறிப்பாக கரோனாபாதிப்பால் ஆன்லைனில் பொருட்கள்வாங்குவது (இ.காமர்ஸ்) அதிகரித்துள்ளது. அதேநேரம், இ.காமர்ஸ் தொடர்பான புகார்களும் 60 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. ஆனால், இந்த புகார்கள் மீது உடனடியாகத் தீர்வு காண்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் நிலவுகின்றன.

நிறுவனங்கள் பணத்தை திருப்பி அளிக்காதது, பொருட்களை மாற்றித்தராதது, பொருட்கள் விநியோகிப்பதில் தாமதம் போன்ற புகார்கள் அதிகமாகவருகின்றன. குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகக் கூறி, ஊர் பெயர்தெரியாத நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கி ஏமாறக் கூடாது. ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது மக்கள் மிகவும் கவனமாக இருந்து நிறுவனங்களைத் தேர்வு செய்வதோடு, வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் ஆராய்ந்த பிறகே வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் செ.பால் பர்ணபாஸ் கூறும்போது, ‘‘நுகர்வோரின்உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும்பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கான சட்டங்கள் குறித்து இந்த ஆண்டு நடக்கவுள்ள கருத்தரங்கில் எடுத்துரைக்கப்படும். கலப்படப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதாலும், ஓட்டல் உணவுகளைத் தொடர்ந்து உண்பதாலும் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

எனவே, உணவகங்கள், உற்பத்திக் கூடங்கள், பொருட்கள் தயாரிப்பு இடங்களில் சோதனைப் பணிகளை உணவுபாதுகாப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில் சமரச மையங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும். மாநில நுகர்வோர் தகவல் மையத்தை முழுமையாகச் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது: ரயில்கள், பேருந்துகள் என பொதுப்போக்குவரத்து வசதியை கோடிக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பெரும்பாலான பேருந்துகள், ரயில் நிலையங்களில் இன்னும் கழிப்பிடம், குடிநீர் வசதிகள் கூட இல்லை. மக்கள் பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகள், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து, பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும்.

குறிப்பாக, ஆம்னி பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்களின் கட்டண உயர்வுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நிதி நிறுவனங்களின் உதவியுடன் பொருட்கள் வாங்கும்போது, அந்தந்த நிறுவன உறுப்பினர் அட்டை என வழங்கி ஆண்டுதோறும் கணிசமான தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்வதும் தொடர்கிறது. இதன் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.