எந்த வயதில் ஜிம்மில் சேர வேண்டும்? அதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா? இந்தக் கேள்விகள் நமக்குள் நிச்சயம் எழுந்திருக்கும்.
இந்தக் கேள்விக்கான விடையை சென்னையைச் சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் சதீஷிடம் முன்வைத்தோம்.
அவர் கூறியதாவது:
எந்த வயதினரும் ஜிம்மில் சேரலாம். உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேரலாம். வயதானவர்கள் உடலை சீரான நிலையில் வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.
சிறுவனர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கவும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
வீட்டிலும் உடற்பயிற்சி செய்யலாம். ஆனால், ஜிம்மை தேர்வு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
தங்கள் பிள்ளைகளை சில பெற்றோர் ஜிம்முக்கு அனுமதிக்க மாட்டார்கள். காரணம் என்ன என்று கேட்டால் அதிக எடையைத் தூக்க வேண்டும் என்பதால் என்று கூறுவார்கள். இந்த எண்ணத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும்.
ஜிம்மென்றால் அதிக எடையைத் தூக்கும் இடம் என்று கருதக் கூடாது. ஜிம் என்பது உடற்பயிற்சிகளை செய்வதற்கான இடம். சிலருக்கு வீட்டில் உடற்பயிற்சி செய்ய வசதி இருக்காது. அவர்களுக்கு எப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தெரியாது.
அதனால், உடற்பயிற்சிகூடமே அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். அவர்களுக்கு அங்கிருக்கும் பயிற்சியாளர் உடற்பயிற்சிகளை கற்றுத் தருவார். அதேநேரம், ஜிம்மில்தான் சேர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் கிடையாது. வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம்.
பெரும்பாலான ஊர்களில் அரசே உடற்பயிற்சி மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுவர்கள் என்றால் அவர்களை பெற்றோர் அருகில் உள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று விளையாட வைக்கலாம்.
இப்போதெல்லாம் பூங்காவில் சறுக்கி விளையாடுவதற்கும், தொங்குவதற்கு கம்பியும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பயன்படுத்தி பிள்ளைகளை விளையாட ஊக்குவிக்கலாம். ஜிம்மைப் பொறுத்தவரை உடலின் வலிமையைக் கூட்டுவதற்கான இடம் மட்டுமல்ல என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஜிம்முக்கு நீங்கள் வந்தால் உங்களின் உடலை உறுதி செய்வதோடு உங்களின் மன உறுதியையும் அதிகரித்துச் செல்லலாம். இதனால், அலைபாயும் உங்களின் மனம் ஒருமுகப்படுத்தப்படும். வயதானவர்களுக்கு கஷ்டமான உடற்பயிற்சிகளை பயிற்சியாளர்கள் கற்றுத் தர மாட்டார்கள். அதனால் முதலில் அச்சம் கொள்ளாதீர்கள்.
ஆபரேஷன் செய்தவர் என்றால் மருத்துவரின் அனுமதி இல்லாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.
உதாரணத்துக்கு வயதானவர்களால் தரைத்தளத்தில் தண்டால் எடுக்க முடியாமல் போகும்பட்சத்தில் wall push ups எடுக்க வைக்க முயற்சி செய்வோம்.
ஏலக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? அதை எப்படி சாப்பிடுவது? ஆயுர்வேத நிபுணர் சொல்கிறார்!
உடலைப் பற்றி படித்து தெரிந்துகொள்ளுங்கள். நமது உடல் போன்ற அதிசயம் வேறொன்றும் இருந்துவிட முடியாது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடல் குறித்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் உங்கள் உடல் குறித்து தெரிந்து கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு உங்களின் உடல் மீது மதிப்பு கூடும் என்கிறார் சதீஷ்.
மொத்தத்தில் எந்த வயதினரும் உடலின் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ மட்டும் ஜிம் என்று கருதாமல் தினசரி நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்யவும் ஜிம் உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“