நாடாளுமன்றத்தில் உறுதி உக்ரைனில் படித்த மாணவர்களின் எதிர்காலத்திற்கு அரசு உதவும்: அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ‘உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்துக்கு அரசு நிச்சயம் உதவும்’ என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் போர் மூண்டதைத் தொடர்ந்து அங்கு படித்து வந்த 18,000 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவில் அவர்கள் மருத்துவப்படிப்பை தொடர அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதுதொடர்பாக நேற்று மக்களவையில்  பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, ‘‘தமிழக மாணவர்களை மீட்டதற்காக  பிரதமர் மோடிக்கு நன்றி. உக்ரைனில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள்  கல்வியை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் உறுப்பினர் கனகமெடலா ரவீந்திர குமார், ‘‘உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், ‘‘பெரும்பாலான மாணவர்களின் கல்வி திடீரென நின்று உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது’’ என்று  கேட்டார். அமர் பட்னாயக்(பிஜூ ஜனதா தளம்) பேசுகையில், ‘‘உக்ரைனில் இருந்து வந்துள்ள மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்வியை தொடருவதற்கு வசதியாக மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களை 5 சதவீதம் உயர்த்த வேண்டும்’’ என்றார். மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளும்’’ என உறுதி அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் நிம்மதி தந்துள்ளது. மேலும், உக்ரைனில் இருந்து மாணவர்கள் மீட்கப்பட்டது மற்றும் அவர்களின் எதிர்கால கல்வி குறித்து ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.