புதுடெல்லி:மக்களவையில் மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கிஷண் ரெட்டி நேற்று கூறியதாவது: கரோனா முதல் அலையின்போது இந்தியாவுக்கு சுற்றுலாவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 93 சதவீதம் குறைந்தது. இரண்டாவது அலையின்போது 79 சதவீதமும், மூன்றாவது அலையின்போது 64 சதவீதமும் வெளிநாட்டினரின் வருகை குறைந்தது.
இந்திய சுற்றுலா துறையில் 3.8 கோடி பேர் பணியாற்றுகின்றனர். முதல் அலையின்போது இந்திய சுற்றுலா துறையில் 1.4 கோடி பேர் வேலையிழந்தனர். 2-வது அலையின்போது 52 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோனது. 3-வது அலையின்போது 18 லட்சம் பேர் வேலை இழந்தனர். ஒட்டுமொத்தமாக 2.1 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன்
நாடு முழுவதும் 180 கோடி டோஸ் தடுப்பூசி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கரோனா வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. எனவேசுற்றுலா தொழில் மீண்டும் எழுச்சி பெறும் என நம்புகிறோம். சுற்றுலா தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் சுற்றுலா தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.