புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் பாதிப்பு 2,503 ஆக இருந்தநிலையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 809 பேர், மிசோரத்தில் 494 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 96 ஆயிரத்து 62 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. அதே நேரம் அங்கு இறப்பு பட்டியலில் விடுபட்ட 78 மரணங்கள் நேற்று சேர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர கர்நாடகா, ஒடிசாவில் தலா 4 பேர் உள்பட மேலும் 97 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,15,974 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 4,722 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 46 ஆயிரத்து 171 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 33,917 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 2,251 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 180.40 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 19,64,423 டோஸ்கள் அடங்கும்.