சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில், நிர்வாக பிரிவு துணை கமிஷனராக நடராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த அலுவலகத்தில் உதவியாளர் நிலையில் பணிபுரியும் ஊழியர்களிடத்தில் ரகசிய கூட்டம் நடத்தி, கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு அடையவேண்டுமெனில் ரூ. 5 லட்சம் தரவேண்டும் என பேசியதாக தகவல் வெளியானது. இதே போல் மாநிலத்தின் வேறு இடங்களில் பணிபுரியும் போக்குவரத்துத்துறை கண்காணிப்பாளர்களிடத்தில், நீங்கள் அதே இடத்தில் பணிபுரியவேண்டுமெனில், ரூ. 5 லட்சம் தரவேண்டும், இல்லையெனில் உங்களின் இருப்பிடத்திற்கும், பணியிடத்திற்கும் சம்பந்தமே இல்லாத இடத்திற்கு மாற்றிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததால் லஞ்ச ஒழிப்புத் துறையினர், நேற்று மாலை 3 மணியளவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.
இதில் அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத பணமாக ரூ. 35 லட்சம் இருந்ததை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் நடராஜனிடத்தில் விசாரணை நடத்தியதில், போக்குவரத்துத்துறை இணையதளத்தில் விபரங்களைப் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை நடராஜன் கவனித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், பதவி உயர்வு வழங்கும் அளவுக்கு நடராஜனுக்கு இந்த விஷயத்தில் சம்பந்தமில்லை, இருப்பினும் நடராஜன் தன் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வசூலித்ததாக அங்கு கூறப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த விசாரணையானது இரவு 10 மணிக்கு மேலும் தொடர்ந்து நடைபெற்றது. விசாரணை குறித்த முழுமையான தகவல் ஏதும் வெளிவரவில்லை.