முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான நாமக்கல் ஆசிரியர் சரவணக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ய சென்றபோது வீடு பூட்டி இருந்ததால் சோதனையிடாமல் காத்திருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 58 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான ஆசிரியர் சரவணக்குமார் என்பவர் நாமக்கல் அடுத்துள்ள கொண்டிசெட்டிபட்டியில் வசித்து வருகிறார். இவர், நாமக்கல் மாவட்டம் செருக்கலை அடுத்த எஸ்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை சோதனை செய்ய வந்தனர். அப்போது, அவரது வீடு பூட்டி இருந்ததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரவணகுமாரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அவர் கோவையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு உடனடியாக வருமாறு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கூறியுள்ளனர். அதன்படி தற்போது, அவரின் வருகைக்காக லஞ்ச ஒழிப்பு போலீஸார் காத்திக்கின்றனர்.
ஆசிரியர் சரவணக்குமார் வரதன் இன்ப்ரா நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் என லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர் கடந்த ஆட்சியில் பல ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் பெற்று கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM