‘சார்லேட்டன்’ என்றால் தன்னிடம் இல்லாத திறமையை இருப்பதாக கூறிக்கொள்ளும் போலிகளை குறிப்பிடுவதாகும். 13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் ஆறாம் நாள் திரையிடலில் வாய்த்த அறுசுவை திரைவிருந்து ‘சார்லேட்டன்’.
2020ல் செக் குடியரசு நாட்டு தயாரிப்பில் உருவான ‘சார்லேட்டன்’ திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் அக்னிஷ்கா ஹொலந்த். போலந்து நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் போலந்து திரைமேதைகள் ஜனூசி,அந்த்ரே வாய்தா போன்ற திரைமேதைகளிடம் உதவி இயக்குநராக பணி புரிந்து திரைமொழி கற்றவர். தனது ‘யூரோப்பா யூரோபா’ படத்தின் மூலம் சிறந்த திரைக்கதைக்கு ஆஸ்கர் விருது பெற்றார். 2017ல் வெளியான ‘ஸ்பூர்’ திரைப்படத்துக்கு பெர்லின் பன்னாட்டு திரைப்பட விழாவில் ‘வெள்ளிக்கரடி விருது’ பெற்றார். 2020ல் உருவாக்கிய ‘சார்லேட்டன்’ திரைப்படம் செக் குடியரசின் மூலம் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்பட்டது.
செக்கொலோவஸ்கியா என ஒன்றிணைந்த நாட்டின் அதிபராக இருந்த அண்டோனின் சேபடோஸ்கி மரணத்தில் படம் தொடங்குகிறது. ‘ஜேன் மிக்கலோசேக்’ இயற்கை மூலிகைகளின் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான மக்களை குணப்படுத்தி வருகிறார். இவர் நோயாளிகளின் சிறுநீரை கண்ணாடி பாட்டிலில் கொண்டு வரச்சொல்லி அதை குலுக்கி சூரிய வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்து என்ன நோய்,நோயின் தன்மை, தற்போதைய நோயாளியின் நிலைமை என அனைத்தையும் துல்லியமாகக் கூறி இயற்கை மூலிகைகளை மட்டும் வழங்கி குணப்படுத்தி வருகிறார் அவரால் குணப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர்தான் மறைந்த அதிபர் அண்டோனின் சேபடோஸ்கி. அது மட்டுமல்ல!.
செக்கொலோவஸ்கியா ஹிட்லர் ஆட்சியில் இருந்த போது ஜெர்மன் நாஜி படைத்தலைவர்கள் பலரையும் குணப்படுத்தி இருக்கிறார். சேபடோஸ்கி மறைவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் ஜேன் மிகலோசேக் சிகிச்சையளித்த இருவர் மரணமடைந்து விட்டார்கள் எனக்கூறி மிக்கலோசேக் மற்றும் அவரது உதவியாளர் என இருவரையும் கைது செய்து சிறையிலடைக்கிறார்கள்.
ஃப்ளாஷ்பேக் உத்தியின் மூலம் மிகலோசேக் இளமைப்பருவம் விவரிக்கப்படுகிறது. மிக்கலோசேக்கின் சகோதரியின் கால் நோயின் தன்மையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காலைத்துண்டித்து உயிரைக்காப்பாற்ற அலோபதி மருத்துவர்கள் முடிவெடுக்கிறார்கள். மிக்கலோசேக் மூலிகைகளை அரைத்து சகோதரியின் காலில் பூசி வருகிறான்.
அறுவை சிகிச்சை நாளில் கால் கட்டை பிரித்துப்பார்த்த மருத்துவர்கள், “கால் 95 சதவீதம் குணமாகி விட்டது.அறுவை சிகிச்சை தேவையில்லை” என அறிவிக்கிறார்கள். தனது மூலிகை மருத்துவம் வெற்றிகரமாக செயல்பட்டதால் மேலும் மருத்துவம் பற்றி அறிந்து கொள்ள உள்ளூர் இயற்கை வைத்தியம் பார்க்கும் மூதாட்டியிடம் உதவியாளராக சேர்கிறான்.அவரிடம்தான் சிறுநீரை குலுக்கி சூரிய வெளிச்சத்தில் பார்த்து நோயின் தன்மை அறியும் கலையை கற்றுக்கொள்கிறான். அவர் இறந்த பிறகு மருத்துவத்தை தொடர்கிறான்.
தன்னிடம் உதவியாளராக சேர்ந்தவனை காதலித்து ஓரினச்சேர்க்கையில் திளைக்கிறார். இதனால் இருவரது மனைவிகளும் பிரிந்து செல்கிறார்கள். மிகலோசேக்கும் அவரது உதவியாளரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள். சிறையிலடைக்கப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்ததா? உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் திரைக்கதை பயணிக்கிறது.
மிக்கலோசேக்கின் வாழ்க்கையை புனைவுகள் கலந்து திரைக்கதையமைத்துள்ளார் இயக்குநர் அக்னிஷ்கா ஹொலந்த்.நோயாளிகள் மரணத்தால் மிக்கலோசேக் கைது செய்யப்படவில்லை. தனது வருமானத்தை மறைத்து மோசடி செய்த குற்றத்திற்காக 1959ல் தண்டிக்கப்பட்டு 1963ல் சிறையிலிருந்து வெளியாகி 1973ல் மரணமடைந்தார். ஆனால் அவரது நோயறியும் தன்மை,மூலிகை மருத்துவத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்தது அனைத்தும் உண்மை.
மிக்கலோசேக்கின் இளமைப்பருவ காலத்தை மிகுந்த வண்ண மயமான சட்டகங்களாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அக்னிஷ்கா ஹொலந்த். சிறை வதை படலத்தை இருண்மை நிறைந்த சட்டகங்களாக வேறுபடுத்திக்காட்டி இருக்கிறார். ‘சார்லேட்டன்’ மிகச்சிறந்த திரைமொழியில் ஒரு இயற்கை மருத்துவர் வாழ்க்கையை பல அடுக்குகளில் விவரிக்கிறது.
Directed by Agnieszka Holland
Written by Marek Epstein
Produced by Sarka Cimbalova
Starring Ivan Trojan, Josef Trojan, Juraj Loj, Jaroslava Pokorná
Cinematography Martin Strba
Music by Antoni Komasa-Łazarkiewicz
Production Marlene Film Production
Release date 27 February 2020 (Berlin International Film Festival)
Running time 118 minutes
Countries Czech Republic, Ireland, Slovakia, Poland,
Language Czech