புதுடெல்லி: உத்தர பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு நேற்று மக்களவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜம்மு காஷ்மீருக்கான 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. நேற்று காலை மக்களவை தொடங்கியதும், சமீபத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.பி.க்கள் எஸ்.சிங்காரவடிவேல், எச்.பி.பாட்டீல், ஹேமானந்த் பிஸ்வால் ஆகியோர் மறைவு குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவைக்கு தெரிவித்தார். இதையடுத்து மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரியாவில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற தூதுக் குழுவினர், மக்களவை நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்காக நேற்று வந்திருந்தனர். அவர்கள் மக்களவை மாடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வருகை குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அவை உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அவைக்கு வந்தார். பாஜக எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று பிரதமரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அனைவரும் ‘மோடி.. மோடி..’ என தொடர்ந்து முழக்கமிட்டும் மேசையை தட்டியும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து மத்திய அமைச்சர்களும் இந்த உற்சாகத்தில் இணைந்து கொண்டனர். அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் அவையில் இருந்தனர்.
பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டு முடித்த பிறகு, ஆஸ்திரிய தூதுக் குழுவை ஓம் பிர்லா வரவேற்றார். ஆஸ்திரிய அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு, மக்களவை சார்பிலும் இந்திய மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி, 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 11 வரை, முதல் அமர்வு நடந்தது. நாட்டில் கரோனா பாதிப்பு காரணமாக முதல் அமர்வில் இரு அவைகளும் ஷிப்ட் முறையில் நடத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், மக்களவையும் மாநிலங்களவையும் நேற்று வழக்கம்போல் ஒரேநேரத்தில் இயங்கின. என்றாலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பார்வையாளர் மாடங்களிலும் எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர்.
ஜம்மு காஷ்மீருக்கான 2022-23 ஆண்டு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு 2021-22 நிதியாண்டுக்கு ரூ.18,860.32 கோடிக்கான துணை மானிய கோரிக்கைகளையும் அமைச்சர் முன்வைத்தார். இதன் மீதான விவாதத்தை அதேநாளில் நடத்த அனுமதிக்க கோரும் தீர்மானத்தையும் அவர் கொண்டுவந்தார்.
அந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். துணை மானியக் கோரிக்கைகளை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் தேவை என அவர் கூறினார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து துணை மானியக் கோரிக்கைக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. பிறகு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக துணை மானியக் கோரிக்கை மீது மணீஷ் திவாரி பேசும்போது, ‘‘ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, இதன்மூலம் இந்தியாவுடனான ஜம்மு காஷ்மீரின் இணைப்பு வலுப்பெறும். அப்பகுதி உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பு பெறும். வளர்ச்சி வேகம் எடுக்கும் என்று மத்திய அரசு கூறியது. தற்போது 33 மாதங்கள் கடந்துள்ளன. இந்த நோக்கங்களை அடைவதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளதா என்றால் இல்லை என்றே கூறுவேன்” என்றார்.