13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நிறைவு நாள் அன்று நிறைவான திரைப்படமாக காட்சியளித்தது ‘அவுட் ஆஃப் சிங்’. இயக்குநர் க்வாங்க்வெஸ் கிமினெஸ் திரைப்பட உருவாக்க கலையில் முக்கியமான ஒலிப்பதிவுக்கலையை களமாக வைத்து அற்புதமாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார்.
‘சி’ என அழைக்கப்படும் பெண் ஒலி வடிவமைப்பாளர் இரவு பகலாக ஒலிப்பதிவு கூடத்திலேயே பணியாற்றும் தீவிரவாதி. அவரது அண்மை வேலைகள் குறைபாடுகள் நிறைந்து காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுகிறது. சி இந்தக்குறைப்பாட்டுக்கான காரணத்தை கண்டு பிடிக்க சுய ஆய்வு மேற்கொள்கிறார்.
ஆய்வின் முடிவு, வட இந்திய தேர்தல் முடிவுகள் போல பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஒலியும் ஒளியும் ஒன்றிணைந்து மூளைக்கு எட்டவில்லை. உதாரணமாக கையை தட்டி சிறிது நேரம் கழித்துதான் கை தட்டும் ஒலி கேட்கிறது. பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக இக்குறைபாடு ஏற்பட்டுள்ளது என முடிவு செய்து மருத்துவரை அணுகுகிறார்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற அனைத்து மருத்துவ ஆய்வுகளையும் மேற்கொண்டதில் அனைத்து அறிக்கைகளும் ‘இயல்பாக இருக்கிறார்’ என்றே கூறுகிறது. மரபு வழியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய பெற்றோரின் உமிழ்நீரை கொண்டு வருமாறு மருத்துவர் வேண்டுகிறார்.
தந்தை இறந்து விட்டதால் தாயின் உமிழ்நீரை கொண்டு வருகிறாள் சி. முடிவு மற்றொரு அதிர்ச்சியை பரிசாகத் தருகிறது. தாயாரின் டி.என்.ஏ ஆய்வு மூலம் அவர் தன்னை பெற்றெடுத்த தாய் அல்ல என்று அறிகிறார். இங்கிருந்து திரைக்கதை விரைவாக விரிகிறது.
இறுதிக்காட்சியில் சுவையான திருப்பம். ஒலி முதலில் கேட்கிறது. காட்சி பின்னால் நிகழ்கிறது. கண்ணாடி தம்ளர் கீழே விழுந்து நொறுங்கும் ஒலி கேட்கிறது. சி தனது கையில் கண்ணாடி தம்ளரை இறுக பற்றிக்கொண்டு இருக்கிறாள். ஒலி வடிவமைப்பு கதையின் களம் என்பதால் ஒலி வடிவமைப்பில் அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறது ‘அவுட் ஆஃப் சிங்’.
International title: Out of Sync
Original title: Tres
Country: Spain
Year:2021
Directed by: Juanjo Giménez
screenplay: Juanjo Giménez, Pere Altimira
Cast: Marta Nieto, Miki Esparbé, Fran Lareu, Luisa Merelas, Cris Iglesias, Julius Cotter, Iria Parada