அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள்- மதுரை ஐகோர்ட்டு அதிரடி

மதுரை:

திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் ராதிகா, தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:-

மனுதாரர் பணி இடத்தில் தன்னுடன் பணிபுரிவோரை வீடியோ பதிவு செய்யக்கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து இதேபோல் செய்து வந்ததால் அவருக்கு சஸ்பெண்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் மனுதாரர் தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோரிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரிக்க விரும்பவில்லை.

அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல.

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. ஏதேனும் அவசரம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு,

1. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாகவும் அலுவலக நேரத்தில் செல்போன் மூலமாக எடுக்கப்படும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழலில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

2. தமிழக சுகாதாரத்துறை செயலர், அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக விதிகள் உருவாக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. இவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் 4 வாரங்களுக்குள்ளாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.