போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை நேரில் சந்திப்பதற்காக கீவ் நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து 20வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
எனினும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, கீவ் நகரில் இருந்த படி தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், 3 நாட்டு பிரதமர்கள் கீவ் நகரத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதை போலந்து அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான முழு ஆதரவை உறுதிப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கம் என்று போலந்து தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது உக்ரைன் மற்றும் உக்ரேனியர்களுக்கு ஒரு பெரிய உதவி தொகுப்பை தலைவர்கள் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ ஐரோப்பிய கவுன்சில் பயணம் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்திற்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டது என செக் குடியரசு பிரதமர் தெரிவித்துள்ளார்.