காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகவும், அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் மொழியைப் பேசுவதாகவும் அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
5 மாநில தேர்தலில் காங்கிரஸின் தோல்விகளுக்கு பிறகு பேசிய அக்கட்சியின் ஜி-23 அதிருப்தி குழுவை சேர்ந்த கபில் சிபல், “ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோர் ஒதுங்கிக் கொண்டு வேறு சில தலைவர்களுக்கு கட்சியை வழிநடத்த வாய்ப்பளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு எதிர்வினையாற்றியுள்ள மாணிக்கம் தாகூர், “ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஏன் நேரு-காந்தி குடும்பத்தை தலைமை பதவியிலிருந்து வெளியேற்ற விரும்புகின்றன? ஏனெனில் காந்திகளின் தலைமை இல்லாமல் காங்கிரஸ் ஜனதா கட்சியாக மாறும். அதன்பின்னர், காங்கிரஸைக் கொல்வது எளிது, இந்தியா என்ற எண்ணத்தை அழிப்பதும் எளிது. இது கபில் சிபலுக்கு தெரியும், ஆனால் அவர் ஏன் ஆர்எஸ்எஸ்/பாஜகவின் மொழியைப் பேசுகிறார்” என்று கூறினார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் நடந்தது. இதில் காங்கிரஸை சோனியா காந்தி தொடர்ந்து வழிநடத்தவும், கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களைத் செய்யவும் வலியுறுத்தபட்டது.
இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் வீடியோக்களை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில், “நாங்கள் தொடர்ந்து போராடுவோம். சமாளிப்போம். உங்கள் குரலை தொடர்ந்து எழுப்புவோம்” என்று கூறியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM