சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு பின்னால் புழல் ஏரி கரை இருக்கின்றது. இந்த பகுதியில் ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பார்வையிட்ட போது ஒரு சிறுவனின் உடலில் கத்தியால் குத்தி, வயிற்றுப் பகுதியை கிழித்து இருப்பது தெரியவந்தது.
பின்னர் சிறுவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிறுவன் செங்குன்றம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், 15 வயதான சிறுவன் கஞ்சா பிரச்சினையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் தீவிரமாக கஞ்சா வியாபாரம் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
தொழில் போட்டியில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அல்லது இந்த சிறுவனின் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.