நொய்டாவில் 9 விநாடிகளில் இடிக்கப்படும் இரட்டை கோபுர கட்டடம் – பின்னணி என்ன?

விதிகளை மீறி கட்டப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை கோபுர குடியிருப்பு கட்டடங்கள் வருகிற மே மாதம் மிகுந்த பாதுகாப்புகளுடன் இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான திட்டமிடல் தற்போது நடந்து வருகிறது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 31, 32 மாடிகளைக் கொண்ட இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை கட்டியது. இரண்டு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் நலச் சங்கம், சூப்பர்டெக் நிறுவனம் மீது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த கட்டடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதால், இரட்டை கோபுர குடியிருப்புகளை இடிக்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மறுஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தது.
image
இதையடுத்து, கட்டடத்தைத் தகர்க்கும் பொறுப்பு மும்பையை சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்நிறுவனம் தகர்ப்புப் பணியை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வருகிற மே மாதம் 22-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் இந்த இரட்டை கோபுர கட்டடங்கள், 9 விநாடிகளில் இடிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திட்டமிடலை எடிஃபைஸ் இன்ஜினீயரிங் நிறுவனம், தற்போது மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்த இரட்டை கோபுரங்களை தகர்க்க நான்கு டன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்படலாம் என்று தகவல்கள் சொல்கின்றன. இரட்டை கோபுர குடியிருப்புகளை சுற்றியுள்ள 1,500 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட உள்ளது. கட்டடங்களை தகர்க்கும்போது 3 மணிநேரமும், தகர்த்தபின் 2 மணிநேரமும், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் வீட்டில் இருக்க அனுமதி மறுக்கப்பட உள்ளது.
image
மேலும், நொய்டா – கிரேட்டர் நொய்டா விரைவுச் சாலையின் ஒரு பகுதியும், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துக்கு தடை செய்து மூடப்பட உள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்புப் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில், அப்பகுதியில் நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அபெக்ஸ் (100 மீட்டர்), செயேன் (97 மீட்டர்) என்ற அந்த இரட்டை கோபுர கட்டடங்கள் இடிக்கப்படுவது குறித்த விளக்கக்காட்சியை, ஊடகங்கள் முன்பு, எடிஃபைஸின் பங்குதாரரான உத்கர்ஷ் மேத்தா பகிர்ந்து கொண்டார். 
அப்போது, இரட்டை கோபுரங்களில் செயனே (31 தளங்கள்) என்ற கட்டடம் முதலில் இடிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அபெக்ஸ் (32 தளங்கள்) என்ற கட்டடம் இடிக்கப்படுவதாக உத்கர்ஷ் மேத்தா கூறியுள்ளார். மேலும், கட்டடத்தின் பத்து தளங்கள் முதலிலும், அதன்பின்பு ஏழு தளங்கள் இரண்டாவதாக என்று அடுத்தடுத்த நிலைகளில் வெடிப் பொருட்கள் வைத்து வெடிக்கப்பட உள்ளதாக தொழில்நுட்ப அம்சங்களை உத்கர்ஷ் மேத்தா விளக்கியுள்ளார்.
image
எடிஃபைஸ் இன்ஜினீயரிங் நிறுவனம் இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள 108 மீட்டர் உயரமுள்ள லிஸ்பன் வங்கியை வெடிகுண்டு மூலம் இடித்துள்ளது. மேலும், உண்மையான தகர்ப்புக்கு முன்னதாக ஒரு சோதனை தகர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஜெட் தகர்ப்பு நிறுவனம், பாதுகாப்பான கட்டிட தகர்ப்புக்கான நிபுணத்துவத்தை வழங்க உள்ளது.

இதுகுறித்து மேத்தா கூறுகையில், “சுமார் 2,500 கிலோ முதல் 4,000 கிலோ வரையிலான வெடிபொருட்கள் தேவைப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் ஒரு சோதனை கட்டிட தகர்ப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இரட்டை கோபுர கட்டடங்களை தகர்க்க ஒன்பது விநாடிகள் மட்டுமே ஆகும் என்றாலும், அதற்கான திட்டமிடல் மற்றும் அடிப்படை பணிகள் இப்போதே நடந்து வருகிறது. அந்தவகையில், குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள மின்சார கம்பிகள், பிளம்பிங் பொருட்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் போன்ற கட்டமைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
image
தகர்ப்பினால் ஏற்படும் இடிபாடுகளின் அளவைக் குறைக்க சுவர்களும் இடிக்கப்பட்டு வருகின்றன. வெடிபொருட்கள் நிரப்பப்பட்டு, இரட்டை கோபுரங்கள் தகர்ப்பின்போது, குப்பைகள் பறப்பதைத் தடுக்க, துணிகளை கொண்டு இரண்டு அல்லது மூன்று அடுக்கு கம்பி வலையை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த வெடிவிபத்தினால் அருகிலுள்ள மற்ற கட்டடங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதனை ஆய்வு செய்து காப்பீடு வழங்கப்படும் என்றும் உள்ளூர் மக்களுக்கு, நொய்டா ஆணைய அதிகாரிகள் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டட தகர்ப்பின்போது ஏற்படும் அதிர்வுகளை தவிர்க்க, இரட்டை கோபுர கட்டடத்தை சுற்றி நிலப் பகுதியில், இதற்கு என்று தயாரிக்கப்பட்ட மெத்தைகள் தரையில் பரப்பப்பட உள்ளன. இதுகுறித்து நொய்டா காவல்துறையுடன் ஆலோசித்தே இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளநிலையில், இரட்டை கோபு தகர்ப்பின்போது, இரண்டு வெளிநாட்டு நிபுணர்கள், ஒரு காவலர், வெடிப்பொருட்கள் வைத்து தகர்ப்பவர் மற்றும் இந்த திட்டத்தின் மேலாளர் என 5 பேர் மட்டுமே அங்கு இருப்பார்கள் என்று மேத்தா கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.