ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிராக ஒருதரப்பு மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவித் துண்டை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். இஸ்லாமியர்களின் மத அடையாளமான ஹிஜாபுக்கு அனுமதி என்றால், இந்து மதத்தின் அடையாளமான காவித் துண்டையும் அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வாதம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை பல கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக பல கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு இடையே மோதல் சம்பவங்களும் வெடித்தன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, அங்குள்ள கல்வி நிலையங்களுக்கு கர்நாடகா அரசு விடுமுறையும் அறிவித்திருந்தது.
இதனிடையே, ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், “ஹிஜாப் என்பது இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒன்று என கூற முடியாது. எனவே, ஹிஜாபை அணிந்து வருதற்கு தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு” என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு ஒருதரப்பினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடகா அரசு விடுமுறை அளித்துள்ளது.
மேல்முறையீடு
இந்நிலையில், ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக 6 மாணவிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM