நொய்டா :’உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுர வீடுகள் மே 22ல், ஒன்பது நிமிடங்களில் தரைமட்டமாக்கப்படும்’ என, அதிகாரி தெரிவித்தார்.
உ.பி.,யின் நொய்டாவில், ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் உள்ளன. இதில், ‘அபெக்ஸ்’ என்ற கட்டடம், 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், ‘செயான்’ என்ற கட்டடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் உடையது.
இந்த இரண்டு கோபுர வீடுகளும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கட்டடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்தப் பணி, ‘எடிபைஸ்’ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டட இடிப்பு குறித்து அந்நிறுவனத்தின் பங்குதாரர் உத்கர்ஷ் மேத்தா கூறியதாவது:
இந்த இரட்டை கோபுரங்கள் மே 22, மதியம் 2:30 மணிக்கு வெடி வைத்து தகர்க்கப்படும். இதற்காக, 2,500 மற்றும் 4,000 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒன்பது நிமிடங்களில் இரண்டு கோபுரங்களும் இடிந்து தரைமட்டமாகும்.
அன்றைய தினம், இரட்டை கோபுரத்தை சுற்றியுள்ள 1,500 குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்படுவர். நொய்டா – கிரேட்டர் நொய்டா விரைவு நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement