கோவை: “அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். அதேநேரத்தில், அவரது வீட்டிலிருந்து சில பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. சோதனை இரவு முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டின் முன்பு திரண்டிருந்த அதிமுகவினரை, அவர் சந்தித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியது: “என் வீட்டில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. என் மீது, என் சகோதரர், உறவினர்கள், எனக்கு தெரிந்தவர்கள், திமுகவை கடுமையாக எதிர்த்து தேர்தல் வேலை பார்த்தவர்கள், முதல்வரை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்க்கிறவர்கள் மீது எல்லாம் வழக்குப் பதியப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை சோதனை நடத்தப்பட்டபோதும் எதுவும் கைப்பற்றவில்லை. தற்போது சோதனை நடத்தப்பட்ட போதும் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகின்றன. என் வீட்டில் ஒத்த ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. இதுதொடர்பாக சோதனை நடத்தியவர்களே கையெழுத்திட்டு சான்று அளித்துள்ளனர். இந்தச் சோதனையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். நாங்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை நடத்தி எங்கள் வேலைகளை முடக்க நினைக்கிறார். ஆனால், அது நடக்காது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக ஆட்சிக்கு நீடிக்க நான் உட்பட சிலர் உறுதுணையாக இருந்தோம். இவ்வாறு உறுதுணையாக இருந்தவர்கள் மீது கடுமையான வழக்குகள் பாய்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் முழுமையாக வெற்றி பெற்றோம். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலில் கடுமையாக வேலை பார்த்தோம். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக முறைகேடான வெற்றி பெற்றது. மக்கள் அதிமுகவுக்கு தான் வாக்கு செலுத்தியுள்ளனர்.
முதல்வர் பொதுவெளியில் பேசும்போது, நான் அனைவருக்கும் பொதுவானவன் என்கிறார். ஆனால், அவரது நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. காவல்துறையினர் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். திமுகவுக்கு அடிமையாக இருக்க வேண்டாம்.
நான் அமைச்சராக இருந்த போது அரசு அதிகாரிகளுடன் தான் வெளிநாட்டுக்கு சென்றேன். அதன் பின்னர், மருத்துவக் காரணங்களுக்காகத் தான் வெளிநாடு சென்றுள்ளேன். என் சகோதரர் வெளிநாட்டில் வசிக்கிறார். குடும்ப நிகழ்ச்சிக்காக என் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்” என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, கருப்பணன், சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேவேளையில், சோதனை இரவு முடிவடைந்தபோது, எஸ்.பி.வேலுமணி வீட்டிலிருந்து சில பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.