நெல்லையை அடுத்த திருமலைக்கொழுந்து புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவர் மனைவி மாதா. விவசாயத் தொழில் செய்துவரும் இவர்கள் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். 50 வயது நிரம்பிய மாதா, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அருகிலிருக்கும் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை ஆற்றுக்குச் சென்று தேடியிருக்கிறார்கள். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். அரை நிர்வாணத்துடன் அவர் உடல் கிடந்ததால் அவரை யாராவது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முட்புதருக்குள் கிடந்த உடலைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, அந்தப் பகுதியில் சிலர் கஞ்சா, மது போதையில் சுற்றித் திரிவதை உள்ளூர் மக்கள் சிலர் பார்த்திருக்கிறார்கள். அதனால் போதையில் இருந்த ஏதாவது கும்பல், மாதாவை முட்புதருக்குள் இழுத்துச் சென்று கொலை செய்திருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகிக்கிறார்கள். அதனால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.