புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா, எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
கால்நடை பராமரிப்பு மாநில அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கால்நடைகளுக்கு உணவு மற்றும் தீவனங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு இந்த வகையில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றது.
மேலும் இந்திய விலங்கு நல வாரியம் கால்நடை நல அமைப்புகளுக்கு உணவு வழங்க நிதியுதவி அளித்து வருகிறது. தேசிய கால்நடை இயக்கம், கால்நடை பராமரிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி ஆகிய திட்டங்களின் மூலம் இந்த நிதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.