சென்னை:
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2022 சர்வதேச சதுரங்க போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை அகில இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
நடந்துகொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்த பிறகு, பல நாடுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சித்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால், தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வு சாத்தியமானது.
சரியாக 10 நாட்களுக்குள், ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு முதலமைச்சர் அலுவலகத்தை அணுகிய சில மணிநேரங்களில் அனைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு உடனே வழங்கியது.
44வது செஸ் ஒலிம்பியாட் 2022க்கான ஏலத்தை வென்றதில் தமிழ்நாடு அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. இப்போட்டிகளில்200 நாடுகளைச் சேர்ந்த 2000 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இப்போட்டி இந்தியாவில் நடைபெற இருப்பதால் பல அணிகள் இந்தியாவின் சார்பில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பும் அமையும்.
தமிழக அரசு எப்போதும் செஸ் விளையாட்டிற்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்து வருகிறது. பள்ளிகளில் சதுரங்கத்தை ஊக்குவித்தல், சதுரங்கப் போட்டிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், செஸ் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் எனப் பல்வேறு வழிகளில்
சதுரங்க விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
இதுபோன்ற ஊக்குவிப்புகள் காரணமாக இந்தியாவின் 73 கிராண்ட் மாஸ்டர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன், ஸ்ரீநாத் மற்றும் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் போன்ற கிராண்ட் மாஸ்டர்கல் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளனர்.
இன்னும் எதிர்காலத்தில் அதிகமான கிராண்ட் மாஸ்டர்கல் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் உத்தேசமாக 26 ஜூலை 2022 முதல் ஆகஸ்ட் 8, 2022 வரை சென்னையில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது
இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் பங்கேற்க வரும் வீரர் ,வீராங்கனைகளை தமிழ்நாடு வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்… இந்த ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டி தொடர் விதிமுறையில் மாற்றம்