புதுச்சேரி: “புதுச்சேரிக்கு வரும் நிதியாண்டில் கூடுதல் நிதி தரவேண்டும்” என்று மத்திய நிதியமைச்சரிடம் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கோரியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் இன்று டெல்லி சென்றுள்ளார். அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண்ரெட்டி, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், மீனவளத்துறை அமைச்சர் முருகன் ஆகியோரை இன்று சந்தித்து பேசியுள்ளார்.
இதுபற்றி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கூறியது: “மத்திய நிதி அமைச்சரிடம், புதுச்சேரியில் நிலவும் நிதி நிலை பற்றியும், வரும் நிதியாண்டில் புதுச்சேரிக்கு கூடுதலாக நிதி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.
சுற்றுலாத்துறை அமைச்சரிடம், நல்லவாடு, நரம்பை, காலாப்பட்டு ஆகிய புதுச்சேரி கடலோர கிராமங்களில் மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தில் கீழ் சுற்றுலா தலமாக மேம்படுத்த நிதி ஒதுக்கி தர கோரினேன்” என்று அவர் கூறினார்.
புதுச்சேரியில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள சுயேச்சை எம்எல்ஏவான அங்களான் மற்றும் எம்பி செல்வகணபதியும் இந்த சந்திப்புகளின்போது, பேரவைத்தலைவருடன் உடன் இருந்தனர். பாஜக நிர்வாகிகளும் இச்சந்திப்பில் இடம் பெற்றிருந்தனர்.
இதுபற்றி கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, பாஜகவுக்கு ஆதரவு அளித்த பிறகும் தங்கள் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களில் முன்னுரிமை தருவது உட்பட பல கோரிக்கைகளை சுயேட்சை எம்எல்ஏக்கள் மூவரும் கோரியிருந்தனர். சுயேச்சை எம்எல்ஏவான சிவசங்கர் அண்மையில் டெல்லி சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆளுநரிடம் தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். தற்போது மற்றொரு சுயேச்சை எம்எல்ஏவான அங்காளன் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தனது கோரிக்கைகளை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டனர்.