கவுஹாத்தி:பிரம்மபுத்ரா நதியில் பயணித்த மிக நீளமான சரக்கு கப்பல், வெற்றிகரமாக அசாமின் கவுஹாத்தியை அடுத்துள்ள பாண்டு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை நீர்வழிப் பாதையுடன் இணைக்கும் வகையில், பிரம்மபுத்ரா நதியில் சரக்கு போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, நம் அண்டை நாடான வங்கதேசத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரம்மபுத்ரா நதி அகலப்படுத்தப்பட்டது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள துறைமுகங்கள் ஆழப்படுத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து, இந்திய உணவு கழகத்துக்காக, 200 டன் எடையுள்ள உணவுப் பொருட்கள், பீஹாரின் பாட்னாவில் இருந்து அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அடுத்த கட்டமாக, 295 அடி நீளமும், 85 அடி அகலமும் உள்ள பிரமாண்ட சரக்கு கப்பல், பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த பிப்., 16ல், மேற்கு வங்கத்தின் ஹால்தியா துறைமுகத்தில் இருந்து, ‘ராம் பிரசாத் பிஸ்மில்’ என்ற இந்த சரக்கு கப்பல் பயணத்தை துவக்கியது. மொத்தம், 1,793 டன் எடையுள்ள இரும்பு கம்பிகள், இதில் எடுத்துச் செல்லப்பட்டன.இந்த கப்பல், வங்கதேசம் வழியாக, அசாமின் கவுஹாத்தியை அடுத்துள்ள பாண்டு துறைமுகத்துக்கு, வந்து சேர்ந்தது.
இதனுடன், இரண்டு துணை கப்பல்களும் வந்தன.டில்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் இந்தக் கப்பலை வரவேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனவால் கூறியதாவது:
சோதனை முயற்சியாக, பிரமாண்ட சரக்கு கப்பல் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இது, வெற்றிகரமாக அசாம் வந்து சேர்ந்துள்ளது.வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் வர்த்தகத்துடன் இணைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக இது அமைந்துள்ளது.மிகவும் குறைவான செலவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் போக்குவரத்து, புதிய எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.