அமராவதி: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டி கூடம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து கடந்த 3 நாட்களில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் ஆபத்தான நிலையில் ஏலூரு, குண்டூர் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தற்போது ஆந்திராவில் எதிர்கட்சிகள் தீவிர விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை வழக்கம் போல் தொடங்கியது. அப்போது, அவையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப் பினர்கள், கள்ளச் சாராயம் விற்பது தெரிந்தும் ஆந்திர அரசு கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டியதோடு, இது குறித்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக விவாதிக்கலாம் என்றும், தற்போது அதற்கு அனுமதி வழங்க இயலாது எனவும் சபாநாயகர் அறிவித்தார். இதை ஏற்காமல் தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர்ந்து இது குறித்து விவாதம் நடத்தியே தீர வேண்டுமென வலியுறுத்தி சபாநாயகரை சுற்றி நின்று காகிதங் களை கிழித்தெறிந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தெலுங்கு தேச உறுப்பினர்கள் அச்சன் நாயுடு, ராமா நாயுடு, கேசவ், புஜ்ஜய்ய சவுத்ரி, பால வீராஞ்சநேய சுவாமி ஆகிய 5 எம்எல்ஏ.க்களை பட்ஜெட் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து மற்ற தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ.க்கள் சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து அவை யில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், ஜங்காரெட்டி கூடம் பகுதிக்கு தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
சந்திரபாபு வலியுறுத்தல்
பின்னர் சந்திரபாபு கூறுகையில், ‘‘ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு அமல் படுத்தப்படுமென ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் மதுபானம், கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கள்ளச் சாராயத்தை ஆளும் கட்சியினரே விற்பது கொடுமை. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்குகிறோம். ஆனால், அரசு இதற்கு பொறுப்பேற்று இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும்’’ என வலியுறுத்தினார்.