சென்னை பல்லாவரத்தில் ஐஸ் உற்பத்தி நிறுவனத்தில் செல்போன் மற்றும் பணத்தைத் திருடிய ஊழியர் மீது போலீசில் புகாரளிக்காமல் அடியாட்களுடன் சென்று அவரைத் தாக்கிய நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பல்லாவரம் மாரியம்மன் கோயில் தெருவில் அன்சார் என்பவர் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் சிறிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு பாலாஜி என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு அறையில் தங்கியிருந்த நபர்களின் செல்போன் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்துடன் , பாலாஜி தலைமறைவானதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசில் புகாரளிக்காமல், அன்சார் தனது ஆட்களை விட்டே பாலாஜியைத் தேடி வந்துள்ளார். பம்மல் பகுதியில் தங்கியிருந்த பாலாஜியை கண்டுபிடித்த கும்பல், அவனை தரதரவென இழுத்துச் சென்று அடித்து உதைத்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பாலாஜி அளித்த புகாரின் பேரில் அன்சார் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.