அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை 6 மணி முதல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்துல் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும் கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
மேலும், எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன், அன்பரசன் மனைவி ஹேமலதா, நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 58.23 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக 3,928 சதவீதம் சொத்து சேர்த்தாக எஸ்பி வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை குற்றச்சாட்டியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை தகவலின்படி, எஸ்பி வேலுமணி 2019இல் மட்டும் மூன்று முறை சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர், மொத்தமாக 14 நாள்கள் தங்கியுள்ளார். அதே போல், மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, மாலத்தீவ் என பல நாடுகளுக்கு சென்று தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது. மொத்தமாக, 32 நாள்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் வித்யாதேவி, விகாஷ், சாரங்கி ஆகியோரும் பல முறை தனியாகவும், கூட்டாகவும் ஹாங்காங், மலேசியா, தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மாலத்தீவ் என பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மொத்தமாக 130 நாள்கள் வெளிநாடுகளில் செலவிட்டுள்ளனர். முறைகேடான பணத்தின் மூலம் பல இடங்களில் குடும்பத்தினர் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ள எஸ்பி வேலுமணி, இதே நடைமுறையை வெளிநாடுகளிலும் பின்பற்றியிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது, ரூ13 லட்சம் பணம் மீட்கப்பட்டது.
இது தவிர்த்து சேலத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் 3 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான புகார்கள் காரணமாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.