திருச்செங்கோடு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் எடுத்த நடவடிக்கை காரணமாக மனம் உடைந்து 9 ஆம் வகுப்பு மாணவி 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் காலதாமதமாக வகுப்புக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரை ஆசிரியர் 10-15 நிமிடங்கள் வரை வெளியே நிற்க வைத்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒரு மாணவி 2ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உயிரிழந்த மாணவி வகுப்பின் லீடராக இருந்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தமிழ் வகுப்பு தொடங்க இருந்தது. அந்த வகுப்பிற்கு அவர் லேட்டாக வந்துள்ளார். இதையடுத்து, அவரையும் அவருடன் இருந்த வேறு சில மாணவிகளையும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வகுப்புக்கு வெளியே ஆசிரியர் நிற்க வைத்துள்ளார்.
பின்னர் உள்ளே அனுமதித்துள்ளார். அதேநேரம், கிளாஸ் லீடர் பொறுப்பையும் வேறொரு மாணவியிடம் ஒப்படைப்பதாக ஆசிரியர் அறிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து வாந்தி வருவது போன்று இருக்கிறது என்று கூறி வெளியே சென்ற மாணவி, நீண்ட நேரம் ஆன பிறகும் வகுப்புக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர் பிற மாணவிகளை அனுப்பி பார்க்க சொல்லியிருக்கிறார்.
எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை
அதற்குள் பள்ளி கட்டத்தின் இரண்டாவது தளத்துக்கு சென்று அந்த மாணவி, அங்கிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். உடனடியாக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இருப்பினும், அவர் உயிரிழந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
நீதி கிடைக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி, நாமக்கல் நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் உறுதி அளித்த பிறகு மாணவியின் இறுதிச்சடங்கு நடந்து முடிந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
திருச்செங்கோடு போலீஸார் சட்டப் பிரிவு 174 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.