‘மைதானத்தில் மட்டுமல்ல, டான்ஸும் ஆடுவாங்க!’ அனிருத் பாட்டுக்கு செம ஸ்டெப் போட்ட பி.வி சிந்து

பேட்மிண்டன் (இறகு பந்து) விளையாட்டில் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் (1995 ஜூலை 5) பிறந்த இவர், 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். தொடர்ந்து இரண்டாவது முறையாக 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். அவரின் இந்த தொடர் வெற்றிகள் மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

இவை தவிர, சிந்து 2016ம் ஆண்டு நடந்த சீன ஓபனில் தனது முதல் “சூப்பர்சீரிஸ்” பட்டத்தை வென்றார். மேலும் 2017 ஆம் ஆண்டில் நான்கு இறுதிப் போட்டிகளுடன், அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் இந்தியாவில் சாம்பியன் பட்டங்களையும் வென்றார். அதுமட்டுமின்றி, 2018 ஆம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தலா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், உபெர் கோப்பையில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டில் பேட்மிண்டன் உலக தரவரிசை பட்டியலில் 2ம் இடம் பிடித்த சிந்து, 2018, 2019 மற்றும் 2021 இல் ஃபோர்ப்ஸின் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலில் இடம்பிடித்திருந்தார். பேட்மிண்டனில் முடிசூடா மங்கையாக வலம் வரும் அவருக்கு இந்திய விளையாட்டு துறையின் கௌரவ விருதுகளான அர்ஜுனா விருது மற்றும் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா வழங்கப்பட்டது. மற்றும் இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதையும் அவர் பெற்றுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது.

தற்போது சிந்து, BWF 2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் தரவரிசையில் 90,994 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளார். அவர் முதலிடத்திற்கு முன்னேறுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டும் வருகிறார்.

இதற்கிடையில், சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சிந்து, சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் ‘ராக்ஸ்டார்’ அனிருத் பாடிய ‘மாயகிரியே’ என்கிற தமிழ் பாடலுக்கு நடமாடி இருக்கிறார்.

இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள். மேலும், சிந்துவின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகியும் வருகிறது.

இசையமைப்பாளர் அனிவீ எழுதி இசையமைத்துள்ள ‘மாயகிரியே’ வீடியோ பாடலில் பிக்பாஸ் புகழ் முகன் ராவ் மற்றும் நடிகை ஆத்மிகா நடித்து நடனமாடியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.