பெங்களூரு : கிரிக்கெட் மைதானத்தில் அத்துமீறி நுழைந்த நான்கு கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா — இலங்கை அணிகள் இடையிலான இரண்டா-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் போட்டியின் இரண்டாவது நாளான, 13ல் இந்தியா தனது பேட்டிங்கை முடித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து இலங்கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர்.
முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட இந்திய அணியினர் ‘பீல்டிங்’ செய்து கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில், விராட் கோலியை பார்த்து உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் நான்கு பேர், கம்பி வேலியை தாண்டி, ஒருவர் பின் ஒருவராக மைதானத்துக்குள் குதித்தனர்.அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரின் பிடியில் சிக்காமல் மைதானத்திற்குள் ஓடி, விராட் கோலியிடம் சென்றனர். பின், அவருடன் ‘செல்பி’ எடுக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரும் செல்பிக்கு போஸ் கொடுத்தார்.இதையடுத்து நான்கு பேரும் மீண்டும் இருக்கைக்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் நான்கு பேரையும் போலீசார் பிடித்து இருக்கை பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் நான்கு வாலிபர்கள் மீது மைதானத்துக்குள் அத்துமீறி நுழைதல், கொரோனா விதிமுறையை மீறியது என இரண்டு பிரிவுகளில் பெங்களூரு கப்பன் பூங்கா போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர்கள் கல்லுாரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Advertisement