புதுடெல்லி: இந்தியாவின் ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது. பாதுகாப்பு நடைமுறைகள் மிக உயர்ந்த வரிசையில் உள்ளன என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார். இந்தியா ஏவுகணை ஒன்று கடந்த 9ம் தேதி 124 கிமீ தூரம் பயணித்து பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்து கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு அருகே விழுந்து நொறுங்கியது. இதுகுறித்து விளக்கமளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சகம், ‘பராமரிப்பு பணியின் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை தவறுதலாக தரையிறங்கியது’ என்று கூறியது. இந்த விளக்கத்தை ஏற்காத பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை வரவழைத்து தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில், இந்த விவாகாரம் குறித்து ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ‘ இந்தியாவின் ஏவுகணை அமைப்பு மிகவும் நம்பகமானது. பாதுகாப்பு நடைமுறைகள் மிக உயர்ந்த வரிசையில் உள்ளன. ஏவுகணை விபத்து வருந்தத்தக்கது. நிலையான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அரசாங்கம் தீவிரமாகக் கவனித்துள்ளது. முறையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப் படைகள் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவை, ஒழுக்கமானவை. அத்தகைய அமைப்புகளைக் கையாள்வதில் நன்கு அனுபவம் வாய்ந்தவை. ஆயுத அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். ஏதேனும் குறைபாடு இருந்தால். கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.