சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள்பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்துமூவர் விழா இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இந்நிலையில், பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, நேற்றுஅதிகாலை 4 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரத் தொடங்கினார். நேரம் செல்லச் செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் காலை 6.30 மணி அளவில் தேரில் எழுந்தருளினார். காலை 7.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மேளதாளம், நாதஸ்வரம் முழங்க, பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் அசைந்தாடியபடி வலம் வந்தது.கூடியிருந்த பக்தர்கள், ‘‘தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி, நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, சிவ சிவ’’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.
நான்கு மாட வீதிகளிலும் கபாலீஸ்வரர் தேர் அசைந்தாடி வரும்காட்சியைக் காண வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். அருகில் உள்ள வீடுகளின் மாடியில் ஏறி நின்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிற்பகலில் தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு, மாடவீதிகளில் பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம் வழங்கினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கோயிலின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவிகேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்தர்கள் தவறாமல் முகக் கவசம் அணியும்படி போலீஸார் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தியபடி இருந்தனர்.
கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று (16-ம் தேதி) மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களோடு இறைவன் காட்சி அளிக்கிறார். இந்த விழாவைசிறப்பாக நடத்த, கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
‘‘தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி, நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, சிவ சிவ’’ என்று பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோஷமிட்டனர்.