திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
கோயில்களின் மாநகரான கும்பகோணத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் திருவைகாவூர். இது பாபநாசம் வட்டத்துக்குள் இருக்கும் ஒரு நதியோரத்து கிராமம். பரந்து விரிந்து கிடக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் புகழ் வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் இது. மிகப் பழமையான இக்கோயில் இப்போதும் பார்வைக்குப் பழசாகவே காட்சியளிக்கிறது. இக் கோயிலின் ஒரு வேளைப் பூசைக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.
வில்வ வனத்துச் சிவபெருமான்
இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம் கூடுகிறது. அதாவது மாசி மாதத்து அமாவாசையை ஒட்டி வரும் மகா சிவராத்திரியன்று பல ஊர்களிலிருந்தும் மக்கள் வந்து வழிபடுகிறார்கள். மூன்று நாள்கள் கோயிலில் மகாசிவராத்திரி விழா களை கட்டி விடுகிறது.
வில்வநாத சுவாமி என்பது இங்கு உறையும் இறைவனின் பெயர். இறைவி மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர். தல விருட்சமாக வில்வமரம்.
சோழர் காலப் பாணியில் இக் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிரகாரச் சுற்று. உயர்ந்து நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச் சிறிய ஆனால் கலையழகுடன் கூடிய கோபுரம்.
எமனை விரட்டிய நந்தி
முன்னாலிருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ நுழைவாயிலை நோக்கிக் கொண்டு படுத்திருக்கிறது.
அதற்கொரு கதையும் சொல்லப்படுகிறது. எமன் ஒரு முறை சிவபெருமானோடு மோதி, விரட்டிக் கொண்டு வர, அதனால் கோபமுற்ற நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்து சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் திரும்பிப் படுத்துக் கொண்டிருக்கிறது. எமன் விழுந்த குளம் எம குளம் என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
பட்டீஸ்வரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி ஆகிய தலங்களில் நந்தி சன்னதிக்கு எதிரே நிற்காமல் சற்று விலகியிருக்கிறாரே தவிரத் திரும்பியிருக்கவில்லை
மற்ற சிவாலயங்களைப் போலவே, விநாயகர், முருகன், துர்க்கை, சன்னிதிகளும் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. முருகன், துர்க்கை சன்னதிகளை ஒட்டியும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
அமைவிடம்
அருகில் உள்ள தொடருந்து நிலையம் கும்பகோணம். கும்பகோணத்திலிருந்து எண் 30, 12, 57, 69 குறிப்பிட்ட பேருந்துகளில் செல்லலாம். 18 கிமீ தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்று அங்கிருந்தும் செல்லலாம் (8 கிமீ). அல்லது கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை வழியே திருவலஞ்சுழி என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து சுவாமிமலை வழியாகவும் செல்லலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.