பெய்ஜிங்: சீனாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சுமார்3 கோடி மக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
கரோனா என்ற புதிய வைரஸ்கடந்த 2019 இறுதியில் சீனாவில்தோன்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. கரோனா பெருந்தொற்றால் உலகில் 46 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60 லட்சத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனா உள்ளூர் அளவிலான கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இது கடந்த 2 ஆண்டுகளாக சீனாவை வெளி உலகில்இருந்து கிட்டத்தட்ட துண்டித்துவிட்டது. இந்நிலையில் சீனாவில் தற்போது எளிதில் பரவக் கூடிய ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. சீனாவில் நேற்றுபுதிதாக 5,280 பேருக்கு இத்தொற்றுகண்டறியப்பட்டது. இது முந்தைய நாளை விட இரு மடங்காகும். மேலும் தொடர்ந்து 6-வது நாளாக புதிய பாதிப்பு 1000-க்கு மேல் பதிவாகியுள்ளது.
சீனா முழுவதும் 13 நகரங்களில் முழுமையாகவும் பல நகரங்களில் பகுதி அளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள ஜிலின் மாகாணம் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று புதிதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்றுகண்டறியப்பட்டது.
ஜிலின் மாகாணத்தில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் தலைநகர்சாங்சுன் உட்பட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. மேலும் இந்த மாகாண மக்கள், மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்யதடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் தென்கிழக்கில் சுமார் 1.75 கோடி மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்ஜென் நகரில் கடந்த 3 நாட்களாக ஊரடங்குபிறப்பிக்கப்பட்டு, தொழிற்சாலை கள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் மிகப் பெரிய நகரமான ஷாங்காயில் ஊரடங்கு பிறப்பிக்காவிட்டாலும் அதற்கு இணையாக ஏராளமானகட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.
சீனா முழுவதும் சுமார் 3 கோடிமக்கள் ஊரடங்கு கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். சமீபத்திய கரோனாபரவல் மற்றும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக சீனா 5.5 சதவீத ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) இலக்கை அடைவது சவாலாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவில்… சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்நாட்டில் புதிதாக 3,62,283 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கு கடந்த 7 நாட்களில் சராசரியாக 3,37,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மத்தியில் காணப்பட்டதை விட 80 மடங்கு அதிகமாகும். தென் கொரியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த ஜனவரி இறுதியில் 8 லட்சமாக இருந்தது. இது தற்போது 72 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்நாட்டில் புதிய உச்சமாக ஒமிக்ரான் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு நேற்று 293 ஆக பதிவானது. மற்றொரு புதிய உச்சமாக நாடு முழவதும் 1,196 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். வைரஸ் பரவல் வேகம் காரணமான வரும் வாரங்களில் சுகாதார நெருக்கடி ஏற்படலாம் என்பதால் லேசான மற்றும் மிதமான அறிகுறிகள் கொண்ட 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தென் கொரியர்களில் 62 சதவீதம் பேர் தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர். அதிக தடுப்பூசி விகிதம் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட தென் கொரியாவில், ஒமிக்ரான் உயிரிழப்பு குறைவாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். |