புதுடெல்லி: காவிரி, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 நதிக் கரைகளில் ரூ.19 ஆயிரம் கோடி செலவில் நதியோர காடு வளர்ப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் துறையும், ஜல் சக்திதுறையும் இணைந்து செயல்படுத்த உள்ளன. ரூ.19 ஆயிரம்கோடி செலவில் 13 பெரிய நதிகளையொட்டி காடு வளர்ப்புத் திட்டம்செயல்படுத்தப்படும்.
இதன்மூலம் சுமார் 7,417.36 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு நாட்டில் காடுகளின் பரப்பளவு அதிகரிக்கப்படும்.
காடு வளர்க்கும் திட்டம் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும். மேலும் வண்டல் மண் பிரதேசங்கள் குறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ரூ.449.01 கோடி மதிப்பிலான மரம் அல்லாத, வனப் பொருட்கள் கிடைக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. மேலும் 34.4 கோடிமனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும்சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
காவிரி, ஜீலம், சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ், யமுனை, பிரம்மபுத்ரா, லுனி, நர்மதா, கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா ஆகிய 13 நதிகளையொட்டி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்துக்கான நிதியை தேசிய காடுவளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு வாரியம் வழங்கவுள்ளது.
18,90,110 ச.கிலோ மீட்டருக்கு..
இந்த 13 நதிகளும் 18,90,110 சதுர கிலோ மீட்டர் அளவுக்கான பாசன வசதியைக் கொண்டுள்ளன அல்லது புவியியல் பகுதியில் சுமார் 57.45% சதவீதத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் நீளம் 42,830 கிலோ மீட்டர் ஆகும்.
இந்த நதிகளையொட்டி பல்வேறு மர வகைகள், மருத்துவச் செடிகள், புற்கள், புதர்கள், பழமரங்கள் ஆகியவை நடப்படவுள்ளன. இந்தத் திட்டத்தில் 667 மருத்துவச் செடிகள் மற்றும் தோட்ட மரங்களை நடலாம் என முன்மொழியப்பட்டுள்ளது.
அவற்றில் 283 மருத்துவச் செடிகள் இயற்கை நிலப்பரப்புகளுக்கும், 97 மருத்துவச் செடிகள் விவசாய நிலப்பரப்புகளுக்கும் மற்றும் 116 மரங்கள் நகர்ப்புற நிலப்பரப்புகளுக்கும் முன்மொழியப் பட்டுள்ளன.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் 2030-ம் ஆண்டுக்குள் 2.6 கோடி ஹெக்டேர் பாழ்நிலங்கள் மீட்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா தனது திட்டமிடப்பட்ட கார்பன் உமிழ்வை2030-க்குள் 100 கோடி டன்கள்குறைப்பதாக உறுதியளித்திருந் தது. மேலும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் நாட்டின் 50% மின் சக்தி தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வோம் என்றும் இந்தியா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.