அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரையும் கட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், அதிமுகவில் இருந்து இதுவரை நீக்கப்பட்ட 1,000 பேர்களை ஒன்றிணைக்க பெங்களூரு புகழேந்தி புது திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் கொண்டுவர வேண்டும், அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் கட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 1,000 பேர்களை ஒன்றிணைக்கும் புது திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
சென்னையில் ஹோட்டல் ஒன்றில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரரும், தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவருமான ஓ.ராஜா, அதிமுக ஐ.டி பிரிவின்முன்னாள் செயலாளர் அஸ்பயர் கே. சுவாமிநாதன், பெங்களூரு புகழேந்தி ஆலோசனை நடத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ‘அதிமுகவில் இருந்து காரணமில்லாமல் நீக்கப்பட்ட நான், அன்வர் ராஜா, ஓ.ராஜா அனைவரும் வருங்காலத்தில் அதிமுகவை எப்படி எடுத்துச் செல்வது எல்லோரையும் எப்படி ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசித்தோம். சசிகலாவை எப்படி ஒருங்கிணைத்து கட்சியை கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆலோசித்தோம்.
ஓ.பி.எஸ் இ.பி.எஸ் இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுக்கின்றனர். கிட்டத்தட்ட 1,000 பேர்களுக்கு மேல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களால் ஆயிரக்கணக்கான பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். அத்த்ணை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு அணியாக உருவாக்கி மாநாடு விரைவில் போட உள்ளோம். அதேபோல், இ.பி.எஸ் ஓ.பி.எஸ் எதிர்த்து ஆர்ப்பாட்டம் அனைத்து இடங்களிலும் தொடரும்.
எடப்பாடி பழனிசாமியை நீக்கினால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். இ.பி.எஸ் சொல்வதை கேட்டுக் கொண்டு ஓ.பி.எஸ் ஜால்ரா தட்டி வருகிறார். ஓ.பி.எஸ்-யிடம் நல்ல மனமும் இல்லை குணமும் இல்லை. எல்லோரும் இணைந்து சசிகலாவை ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஓபிஎஸ்-ஐ திட்டியும் பயனில்லை, குறை சொல்லியும் பயனில்லை, நேரம்தான் வேஸ்ட். இபிஎஸ் தான் அனைத்தையும் செயல்படுத்துகிறார். இரண்டு பேர் இணைந்து நாடகமாடுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், சட்டரீதியாக என்ன செய்யவேண்டும், எப்படி ஒன்றிணைய வேண்டும் போன்றவை ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிமுக-வை காப்பதற்கு எல்லோரும் திரண்டு வர வேண்டும்.” என்று கூறினார்.
அதிமுகவில் டி.டி.வி. தினகரனும் சேர்க்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி, “முதலில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும். பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவதாகவும், தனது அரசியல் நலன்களை மேம்படுத்துவதற்காக, சசிகலா பிரச்னையை கருவியாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பன்னீர்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்று கட்சியின் தேனி மாவட்டப் பிரிவினால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது” என்று புகழேந்தி உறுதியாகக் கூறினார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைக்கும் புகழேந்தியின் புது திட்டம் அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பிறகுதான் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”