புதுடில்லி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலின் பாதுகாப்பு தொடர்பான முதல் வரைவு அறிக்கையை, சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உத்தர பிரதேச அரசிடம் தாக்கல் செய்து உள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகள் நடைபெறும் நிலையிலேயே, கோயில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் இருந்து பெற, மாநில அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனை ஏற்ற உள்துறை அமைச்சக பரிந்துரைப்படி, சி.ஐ.எஸ்.எப்., மூத்த கமாண்டன்ட் தலைமையிலான குழுவினர் அயோத்தி வந்தனர்.பாதுகாப்பு ஆலோசனை கட்டணமாக, மாநில அரசின் சார்பில் 18.75 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கோயில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான முதல் வரைவு அறிக்கையை, மாநில அரசிடம் சி.ஐ.எஸ்.எப்., குழுவினர் சமீபத்தில் தாக்கல் செய்து உள்ளனர்.
Advertisement