புதுடெல்லி: ரயில்வே தனியார்மயம், தமிழக மீனவர்கள் விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் நேற்று ஆவேசமாக பேசினர். மக்களவையில் 2022-23ம் ஆண்டுக்கான ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை நேற்று தொடங்கிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சுரேஷ், ‘‘ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது. இப்போது ரயில்வேயையும் தனியார்மயமாக்குவதுதான் அரசின் நோக்கமாக உள்ளது. இப்போதும் அரசின் பொதுத்துறை நிறுவனமாகத்தான் ரயில்வே இருக்கிறதா? அல்லது விற்று விட்டீர்களா?,’’ என்றார்.திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ‘‘ரயில்வேயில் தென் இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்கப்படுவதில்லை. அவர்களை ஒதுக்கி வைக்கும் முயற்சி நடக்கிறது. தற்போது 73 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்குள் 100 சதவீத மின்மயமாக்கலை எவ்வாறு எட்ட முடியும்?’’ என கேள்வி எழுப்பினார். மக்களவையில் திமுக கதிர் ஆனந்த் பேசுகையில், ‘‘வேலூர் விமான நிலையம் விரைவில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று ஒன்றிய அரசு சமீபத்தில் கூறியது. ஆனால், தாமதமாகிறது. சிஎம்சி மருத்துவமனைக்கு தினந்தோறும் சுற்றியுள்ள மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் யாத்திரீகர்கள் வருகிறார்கள். வேலூரில் பயணியர் விமான நிலையத்தை விரைந்து முடிக்கவும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வேலூருக்கு விமான பயணத்தை எளிதாக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். இதை விரைவில் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் வலியுறுத்துகிறேன்,’’ என்றார்.மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘‘கடந்த 38 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அவர்களின் படகுகளையும் அழித்து வருகின்றனர். இந்தியா- இலங்கை இடையே கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், கிரிக்கெட் போட்டியில் இந்தமுறையும் எங்கள் நாடு தோல்வி அடைந்தால், நீங்கள் யாரும் உயிருடன் போக முடியாது என்று மிரட்டினார்கள். அதேபோல் நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி தோற்ற மறுநாள், 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துண்டு துண்டாக வெட்டி கடலில் போட்டனர். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தினமும் நடக்கிறது. இதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று ஆவேசமாக தெரிவித்தார்.