பெங்களூரு: இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத நடைமுறை கிடையாது. அதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவின் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள கல்வி நிலையத்தில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வர வேண்டும் என்று நிர்வாகம் அறிவுறுத்தியது. அங்கு பயின்று வந்த முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததற்குநிர்வாகம் தடை விதித்தது. இதைஎதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் விசாரித்தார். அப்போது, ஹிஜாப் விவகாரத்தை, 3 நீதிபதிகள் அமர்வுவிசாரிக்க அவர் பரிந்துரை செய்தார். இதன்படி தலைமை நீதிபதிரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித்அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்ததையடுத்து, கடந்த மாதம் 25-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் கவனம் ஈர்த்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசியமான நடைமுறையாக இல்லை. கலாச்சாரத்தின் அடிப்படையில் ஹிஜாப் அணியப்படுகிறது. கலாச்சாரமும், மதமும் வெவ்வேறானவை. கல்வி நிலையங்கள் பொது இடமாகும். கல்வி நிலையங்களில் ஒழுக்கம், சீருடை கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். சீருடை விதிகளுக்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவித்த பிறகே கல்விநிலையங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. சில அடிப்படைவாத அமைப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. பள்ளி, கல்லூரி சீரூடையை பரிந்துரைப்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு. அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது.
சீருடை தொடர்பாக அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசின் சீருடை சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சீருடை தொடர்பாக கடந்த பிப்ரவரி 5-ம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். இதன்படி கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும். முஸ்லிம் மாணவிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடு
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, “எல்லாவற்றையும்விட கல்வியே முக்கியம். உயர் நீதிமன்ற தீர்ப்பை மதித்து மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டும். இனிமேல் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அனைத்து தரப்பு பெற்றோரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட் டுள்ளது.