நொய்டா:
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 13-ந்தேதி திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மாயமான சிறுமியை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில் டெல்லி பாக்பத் பகுதியில் சிறுமி இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
போலீஸ் விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சோனு பால்மிகி என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், கூட்டாளி நீது என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் நரபலி கொடுப்பதற்காக சிறுமியை கடத்தி சென்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. கைதான சோனு பால்மிகிக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் கைகூடவில்லை.
திருமணத்துக்கு தொடர்ந்து தடை ஏற்பட்டதால் சதேந்திரா என்கிற மந்திரவாதியை சந்தித்து தனது திருமண தடங்கல் பற்றி கூறினார். அப்போது மந்திரவாதி அவரிடம் ஹோலி பண்டிகையன்று நரபலி கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என யோசனை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் தனது நண்பரான நீதுவிடம் தெரிவித்தார். இதையடுத்து 2 பேரும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அவர்கள் சிறுமியிடம் நைசாக பேசி கடத்தி சென்றனர். டெல்லியில் உள்ள பாக்பத் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரி வீட்டுக்கு அந்த சிறுமியை சோனு பால்மிகி கொண்டு சென்று அடைத்து வைத்தார்.
சிறுமியை அங்கு வைத்து அவர்கள் நரபலி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். அதற்குள் போலீசார் சிறுமியை மீட்டதால் நரபலி கொடுக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. இச்சம்பவத்தில் மந்திரவாதி சதேந்திரா உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
துரிதமாக செயல்பட்டு சிறுமியை மீட்ட போலீசாருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸ் கமிஷனர் அசோக்சிங் தெரிவித்துள்ளார்.