நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த -பிரபல ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபபட்டார். இவர்மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயற்சிகள் எடுத்து வந்தனர். ஆனால், முருகன், காவல்துறையினர் கையில் சிக்காமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் வழியில், அவரை காவல்துறையின் தனிப்படையினர் மடக்கினர். அபபோது, ரவுடி நீராவி முருகன் காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்றதால் திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரி, நீராவி முருகன் காவலர்களை தாக்கியதாலேயே என்கவுண்டர் நடந்ததாகவும், மாறாக திட்டமிட்டு இது நடத்தப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம், நீராவி முருகன் மனைவி, தனது கணவர் என்கவுண்டர் செய்யப்படலாம் என கூறி நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.