புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் 60 சவரன் நகைகளை திருடியதாக, டிரைவர் மீது இரண்டரை ஆண்டுகளுக்கு பின் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதியில், 1974ல் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தனகாந்த்ராஜ். இவர் 2006ல் காலமானார். இவரது மனைவி பார்வதி, 75; ஏனாம் வெங்கடாசல பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வாரிசுகள் சிலர் வெளிநாட்டிலும், சிலர் புதுச்சேரியில் தனித்தனியாகவும் வசிக்கின்றனர். இவரது வீட்டில், வினோபா நகரைச் சேர்ந்த எட்வர்ட், 42; டிரைவராக வேலை செய்து வந்தார்.
கடந்த 2018 ஆகஸ்டில் பார்வதி தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு சென்னை செல்ல திட்டமிட்ட அவர், நகைகளை வைப்பதற்காக எட்வர்ட்டிடம் கூறி, ‘டிரங்க் பெட்டி’ தயாரித்தார். அப்பெட்டியில், தங்கம், வைரம், நவரத்தினத்தில் செய்த 60 சவரன் நகைகளை வைத்து பூட்டினார். பின்பு, சென்னை சென்று மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றார்.
பின், 2019ம் செப்டம்பரில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் மின் வினியோகம் துண்டிக்கப் பட்டு இருந்தது. மின் இணைப்பு கொடுத்து, அறையை திறந்து பார்த்த போது, டிரங்க் பெட்டியில் இருந்த நகை பை மட்டும் மாயமாகி இருந்தது.அதே வேளையில், டிரைவர் எட்வர்ட் தனது எட்டு விரல்களிலும் தங்க மோதிரம் அணிந்து, மனைவியுடன் விமானத்தில் அடிக்கடி ஹைதராபாதிற்கு சென்று வந்துள்ளார்.
எட்வர்ட் மீது பார்வதிக்கு சந்தேகம் எழுந்தது.டிரைவர் எட்வர்ட், டிரங்க் பெட்டி தயாரித்த போது அதற்கு மாற்று சாவி தயாரித்து, தான் இல்லாத சமயத்தில் பெட்டியை திறந்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 60 சவரன் நகைகளை திருடி விட்டதாக, ஒதியஞ்சாலை போலீசில் பார்வதி புகார் அளித்தார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் மனோஜ், டிரைவர் எட்வர்ட் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement